ஞாயிறு, 31 அக்டோபர், 2010

கூகுல் புதிய சேவைகளை அறிய ஒரு இணையதளம்

கூகுல் சமீபத்தில் கூகுலிசை சேவையை அறிமுக‌ம் செய்தது.அதற்கு ச‌ற்று முன் கூகுல் பிரிவியூ சேவையை அறிமுகம் செய்தது.அத‌ற்கும் முன்பாக கூகுல் உடனடி சேவையை கொண்டு வந்தது.

சில மாதங்களுக்கு முன்பாக கூகுல் அலையை அறிமுகம் செய்தது.அலை இப்போது ஓய்ந்து விட்டாலும் கூகுல் பஸ் இன்னும் செயல்படுகிறது.

இனி வரப்போகும் காலத்திலும் கூகுல் புதிய அறிமுகங்களை செய்த வண்ணம் இருக்கப்போகிறது .இவற்றில் சில கூகுல் அலை அல்லது பஸ் போல மெரும் பரபரப்பை ஏற்படுத்தலாம்.தேடல் கட்டத்தை நீட்டிய சேவை போல சில சத்தமில்லாமல் நிகழலாம்.

இப்படி கூகுலின் புதிய சேவைகளை தவறவிடாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கான வழி இருக்கிறது.அதனையும் கூகுலோ அறிமுகம் செய்துள்ளது.

கூகுலின் புதிய சேவைகளை எல்லாம் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் கூகுல் நியூபிராடக்ட்ஸ் தளம் உருவாக்கப்பட்டுள்ளது

http://www.google.com/newproducts/

ஒரே நேரத்தில் மூன்று தேடியந்திரங்களில் தேட‌

தேடியந்திரங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியம் இணையவாசிகளுக்கு ஏற்படுமா என்று தெரியவில்லை.ஆனால் முன்னணி தேடியந்திர‌ங்களின் முடிவுகளை ஒப்பிட்டு பார்க்க விரும்பினால் அதற்கான தேடியந்திரங்கள் இல்லாமல் இல்லை.

இந்த வரிசையில் மேலும் ஒரு தேடியந்திரமாக ‘யாபிகோ’வை சொல்ல்லாம்.அது என்ன யாபிகோ என்று கேட்க தோன்றலாம்.தேடியந்திர மும்மூர்த்திகளான யாஹு,பிங்,மற்றும் கூகுல் ஆகிய மூன்று தேடியந்திரங்களின் சுருக்கம் தான் யாபிகோ.

பெயரை போலவே இந்த மூன்று தேடியந்தரங்களிலும் ஒரே நேரத்தில் தேட இந்த தளம் உதவுகிறது.மூன்று தேடல் பட்டியலும் அருகருகே இடம் பெறுகின்றன.அப்படியே ஒப்பிட்டு பார்ட்த்து கொள்ளலாம்.

ஒவ்வொரு முடிவுக்கு கீழேயும் மற்ற தேடியந்திரத்திலும் அது உள்ளதா என்னும் குறிப்பும் இடம் பெறுகிறது.

கூடவே தேடல் முடிவுகளை பகிர்ந்து கொள்ளும் வசதியும் உள்ளது

http://www.yabigo.com/

ஒரே நேர‌த்தில் தேட மேலும் சில தேடியந்திரங்கள்

ஒப்பிட்டு நோக்கில் இல்லாவிட்டாலும் வேறு பல காரணங்களுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட தேடியந்திரங்களில் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்கென பல தேடியந்திரங்கள் இல்லாமல் இல்லை.

அவற்றில் மிக எளிமையான இரண்டு தேடியந்திரங்களை பார்ப்போம்.

முதலில் தி இன்போ.காம்.அநேகமாக பழைய தேடியந்திரமாக இருக்க வேண்டும்.இதன் வடிவமைப்பே அதற்கு சான்று.அதோடு இப்போது பலரும் மறந்துவிட்ட ,பெரும்பாலானோர் கேள்விபட்டிராத ஆல் தி வெப் தேடியந்திரத்தையும் தனது பட்டியலில் சேர்த்து கொண்டுள்ளது.அதோடு மைக்ரோசாப்டின் எம் எஸ் என் தேடியந்திரத்தையும் பட்டியலிட்டுள்ளது.பல் அவதாரம் எடுத்த மைக்ரோசாப்ட் தேடியந்திரம் தற்போது ‘பிங்’காக உருவெடுத்து விட்டதை இன்னும் கணக்கில் எடுத்து கொள்ளாமல் இருக்கிறார்களே என்று பார்த்தால் 2000 த்துக்கு பிறகு புதுபிக்கப்படவில்லை என்னும் குறிப்பு காணப்ப‌டுகிறது.

எனவே இத‌னை பயன்படுத்துவதில் அர்த்தமில்லை.ஆனால் பல தேடியந்திர தேடலின் பாரம்பரியத்தின் சுவடுகளை நினைவு கொள்ள இது உதவலாம்.

தி இன்போ உங்களுக்கு ஏமாற்றம் அளிக்கலாம் என்றாலும் சர்ச்சி.யோ நிச்சயம் உங்களை கவரும்.

பல தேடியந்திர சேவைகளின் கூகுல் என்று இதனை சொல்லலாம்.கூகுலை போலவே எளிமையான தெளிவான் வடிவமைப்பு கொண்டிருப்பதோடு செயல்பாட்டில் அத‌னை போலவே அசத்துகிறது.

இதன் தேடல் கட்டத்தில் குறிச்சொல்லை டைப் செய்தது விட்டு இடது பக்கத்தில் வந்தால் நமக்கான தேடல் வாய்ப்புகள் மேலும் கீழுமாக வரிசையாக தோன்றுகின்றன.செய்திகள்,புகைப்படங்களா,வலைப்பதிவுகளா,புக்மார்குகளா,வீடியோக்களா, என எவற்றை வேண்டுமானாலும் தேர்வு செய்து தேடலாம்.புத்தகங்கள்,எழுத்துருக்கள்,நபர்கள் என நீளூம் இந்த பட்டியலில் தேடியந்திரங்களும் உள்ளன.

தேடியந்திரங்களை கிளிக் செய்தால் கூகுலின் தேடல் பட்டியல் தோன்றுகிறது.அப்படியே மேலே பார்த்தால்,பிங்,ஆஸ்க்,லைகோஸ்,ஆல்திவெப்,டாக்பைல் ஆகிய தேடியந்திரங்கள் இடம் பெற்றுள்ளன. எந்த தேடியந்திரம் தேவையோ அத்னை கிளிக் செய்தால் அதற்கான முடிவுகள் தோன்றுகின்றன.

புக்மார்க்குகள்,டிவிட்டர் போன்ற சமூக தளங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டும் தேட‌லை செழுமைப்படுத்திக் கொள்ளலாம். எந்த கட்டத்திலும் வடிவமைப்பு குழப்பம் இல்லாமல் எளிமையாக வழிகாட்டுவது பாரட்டத்தக்கது.ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தேட விரும்புகிறவர்களுக்கு இந்த தேடியந்திரம் மிகவும் ஏற்றது. இந்த‌ தேடியந்திரத்தின் எளிமையின் மகத்துவத்தை புரிந்து கொள்ள இதே போன்ற‌ சேவையை வழங்குவதாக சொல்லி கொள்ளும் வைபீஸ் தளத்திற்கு சென்று பார்க்க வேண்டும்.கூகுலில் துவங்கி,டிக்,அலெக்ஸா,யூடியூப்,டைலிமோஷன்,டிவிட்டர் என பல தளஙகலை பட்டியலிட்டாலும் அவற்றில் ஒரு ஒழுங்கே தேடுபவர்கள் பற்றீஅய் கரிசனமோ இல்லாமல் சிக்கலானதாக காட்சி அளிக்கின்றன.விளம்பர‌த்துக்காக உருவாக்கப்பட்ட சேவையாக‌ இருக்க வேண்டும்

இணையதள முகவரி;http://search.io/

———-

http://www.theinfo.com/

——–

http://wiibeez.com/

ஆசிரியர்களுக்கு நன்றி சொல்ல ஒரு இணையதளம்

இன்டெர்நெட்டை பேராசிரியர்களுக்கு விரோதமானது என்று சொல்வதற்கில்லை.ஆனால் பேராசிரியர்களை மனம் நோக வைக்ககூடிய இணையதளங்கள் இருக்கின்றன.

பேராசிரியர்களை மாணவர்கள் மதிப்பிட வைக்கும் தளங்கள் தான் அவை.

பொதுவாக ஆசிரியர்களும் பேராசிரியர்களும் தானே மதிப்பெண் போடுவார்கள்.ஆனால் இந்த தளங்கள் மூலம் பேராசிரியர்களுக்கு மாணவர்கள் மதிப்பெண் போடலாம்.அதாவது அவர்களை மதிப்பிடலாம்.

1 முதல் 5 வரை மதிப்பெண் கொடுப்பதோடு பேராசிரிர்கள் பாடம் நடத்திய விதம் குறித்து கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.

ரேட் மை டீச்சர் தளம் இந்த வகை தளங்களை முன்னோடி என்று சொல்லலாம்.அதைவிட முதலில் ஆர்ம்பிக்கப்பட்ட தளம் என்று சொல்லலாம்.ஆசிரியர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவ்ர்கள் அல்ல என்றாலும் மாணவர்கள் ஆசிரியர்களை சீர் தூக்கி மதிப்பிட வைத்த இந்த தளம் இண்டெர்நெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஒருவிதத்தில் இன்டெர்நெட்டின் சுதந்திர போக்கின் விளைவாக இந்த தளத்தை கருதலாம்.இணையம் எல்லாவற்றையும் கேள்வி கேட்கவும் விமர்சனம் செய்யவும் வழி செய்துள்ளது.வர்த்தக நிறுவனங்களையும் அதன் தயாரிப்புகளையும் சாமன்யர்கள் தராசில் நிறுத்தி தீர்ப்பு சொல்ல உதவும் இணையதளங்கள் மற்றும் சேவை உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்கு ஆசிரியர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

இந்த நோக்கில் தான் ரேட் மை டீச்சர் தளம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆசிரியர்களை பகிரங்க விமர்சனத்திற்கு உள்ளாக்குவது நல்லது தானா என்னும் விவாதத்தை ஏற்படுத்திய இந்த தளத்தை தொடர்ந்து ரேட் மை பிரபசர் என்னும் கால்லூரிஆசிரியர்களுக்கான மதிப்பீட்டு தளம் தலை காட்டின.

இந்த தளங்களின் அவசியம் மட்டும் பயன்பாடு குறித்து கேள்விகள் இருந்தாலும் அடிப்படையில் இவை மாணவர்களுக்கான விளையாட்டான சேவை என்றே கருதப்பட்டன.பெரும்பாலான ஆசிரியர்கள் இவற்றை கண்டு கொள்ளாமால் இருப்பது நல்லது என நினைத்தனர்.

இருந்தாலும் நல்லாசிரியர்களுக்கு இந்த தளங்கள் வேதனையையே தரலாம்.

ஆனால் இந்த போக்கிற்கு மருந்து போடும் வலையில் அருமையான இணையதளம் ஒன்று இப்போது உதயமாகியுள்ளது.டீச்சர்வால் என்னும் இந்த தளம் ஆசிரியர்கள் மீதான மாணவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது.

டீச்சர்களுக்கான டிவிட்டர் என்று சொல்லக்கூடிய இந்த தளத்தில் மானவர்கள் அபிமான ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்ளலாம்.அப்படியே அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தை வார்த்தைகளில் பகிர்ந்து கொள்ளலாம்.

ஆசிரியர் யார் ,அவர் எப்படி தன்னை கவர்ந்தார் என்பதை குறும்பதிவு போல பகிர்ந்து கொள்ளலாம்.பேஸ்புக் மற்றும் டிவிட்டர் மூலம் அதனை பகிர்ந்து கொள்ளலாம்.

மற்றவர்கல் முன்னுதாரனமாக கருதும் ஆசிரியர்கள பற்றி படித்து பார்த்து கருத்தும் தெரிவிக்கலாம்.அந்த வகையில் ஆசிரியர் மீதான பற்றின் அடிப்படையில் நட்பை வளர்த்து கொள்ளும் வலைப்பின்னல் தளம் என்றும் இதனை கொள்ளலாம்.

நம்முடைய ஆசிரியர் பற்றி சொல்லியுள்ளனரா என்று அவரது பெயரை குறிப்பீடு தேடும் வசதியும் இருக்கீறது.கல்வி நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டும் தேடலாம்.

இப்போது தான் துவங்கப்பட்டுள்ள தளம் என்பதால் பெரிய அளவில் பட்டியல் நீளவில்லை என்றாலும் ஆசிரியர் பற்றிய பத்கிவுகள் சில உள்ளபடியே நெகிழ வைக்கின்றன.

மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது என்றும் அப்படி மாற்றத்தை ஏற்படுத்திய நல்லாசிரியர்களின் மீதான நன்றி உணர்வை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக இந்த தளம் உருவாக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் நல்ல உணர்வுகளை மட்டுமே வெளீப்படுத்தவும் என்றும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

நம்மில் கூட பலர் அருமையான ஆளுமைகளை ஆசிரியர்களாக பெற்றிருப்போம்.அவர்கள் பற்றி அவப்போது பேசவும் செய்ய்லாம்.அத்தகைய உணர்வுகளை பதிவு செய்வதற்கான கரும்பலகையாக இந்த தளம் அமைந்துள்ளது.

எனவே உங்களுக்கும் மறக்கு முடியாத ஆசிரியர்கள் இருந்தால் டீச்சர்வாலில் அவரை நினைவு கூறுங்கள்

இணையதள முகவரி;http://www.teacherwall.com/view/main

திங்கள், 4 அக்டோபர், 2010

ஓவியங்களை ரசிக்க ஒரு இணையதளம்

பெயின்டிங்ஸ் ஐ லவ் இணையதளம் ஓவியர்களுக்கானது என்றாலும் இதனை ரசிக்க நீங்கள் ஓவியராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.ஓவிய ரசிகராக இருந்தாலே போதும்.

ஓவிய ரசிகர் என்றவுடன் அதற்கென ஏதோ பிரத்யேக ரசனைத்திறன் வேண்டும் என்றோ அல்லது ஆர்ட் கேலரிக்கெல்லாம் போகும் பழக்கம் இருக்க வேண்டும் என்றோ நினைத்து கொண்டு நம்க்கு சரிபட்டு வராது என ஒதுங்கிவிட தேவையில்லை.

ஒரு சாமன்யராகவே இந்த தளத்தை நீங்கள் ரசிக்கலாம்.பிளிக்கர் போன்ற தளங்களில் மணிக்கணக்கில் அழகான புகைப்படங்களை பார்த்து ரசிப்பதில்லையா,அதே போல இதில் அழகான அற்புதமான ஓவியங்களை ரசித்துகொண்டேயிருக்கலாம்.

ஆனால் ஒன்று நீங்கள் உத்தேசித்ததை விட அதிக நேரத்தை இந்த தளத்தில் செலவிட நேரலாம்.இதன் பக்க விளைவாக உங்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் ஓவிய ரசிகரை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

ஆனால் ஒன்று நீங்கள் நினைத்ததை விட அதிக நேரத்தை இந்த தளத்தில் செலவிட நேரிடலாம்.இதன் பக்க விளைவாக உங்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் ஓவிய ரசிகரை நீங்கள் கண்டு கொள்ளவும் நேரிடலாம்.

காரணம் இந்த தளத்தில் இடம் பெற்றுள்ள அழகிய ஓவியங்கள் மற்றும் அவற்றில் உலா வருவதற்கான சுவாரஸ்யமான தள அமைப்பு.

தளத்தின் முகப்பு பக்கத்தில் எப்போதுமே அற்புதமான ஓவியம் வரவேற்கிறது.அதன் கீழும் பக்கவாட்டிலும் மேலும் அழகிய ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.எல்லாவற்றையுமே கிளிக் செய்து பார்த்தால் அந்த ஓவியங்களுக்கு பின்னே உள்ள தனி உலகம் விரிகிறது.

அதாவது ஓவியத்தை வரைந்தது யார்?அந்த ஓவியம் எத்தனை பேரால் பார்த்து ரசிக்கப்படுள்ளது,ரசித்தவர்கள் சொன்ன கருத்துக்கள் போன்ற விவரங்களை பார்க்க முடியும்.

www.paintingsilove.com

சனி, 25 செப்டம்பர், 2010

மேலும் ஒரு காட்சி தேடியந்திரம்

தேடல் முடிவுகளை வரிசையாக பட்டியலிடாமல் ஒரு சித்திரம் போல தோன்றச்செய்யும் காட்சி ரீதியிலான தேடியந்திரங்கள் வரிசையில் ஸ்பெஸிபையையும் சேர்த்துக்கொள்ளலாம்.

ஸ்பெஸிபையில் தேடும் போது முடிவுகள் மிக அழகாக இணையதள‌ங்களின் கோலேஜாக தோன்றுகின்றன.எதில் வேண்டுமானாலும் கிளிக் செய்து கொள்ளலாம். முதல் பார்வைக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கலாம் ,

ஆனால் கொஞ்சம் பழகிவிட்டால் பொருத்தமான இணையதளத்தை தேடுவது மிகவும் சுலபம்.அலுவலக பலகையில் குறிப்புகளுக்கான சீட்டுகள் சின்னதும் பெரிதுமாக ஒட்டப்பட்டிருப்பது போல தோன்றும் இணையதளங்களை அப்படியே நகர்த்தினால் பக்கவாட்டில் இணையதளங்களின் தொகுப்பு நீண்டு கொண்டே இருக்கும்.

வழக்கமான கூகுல் பாணியிலான வரிசையில் தோன்றும் முடிவுகளை பார்த்து பழக்கப்பட்டவர்கள் இந்த பாணிக்கு பழக கொஞ்சம் பயிற்சி தேவை.அதற்கான குறிப்புகள் தளத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளன.

தேடல் முடிவுகளில் எவற்றை கிளிக் செய்கிறோமோ அவை நடச்த்திர குறியோடு பிடித்தமான தளமாக சேமித்து வைக்கப்படும்.அதன் பிற‌கு நட்சத்திர குறியை கிளிக் செய்தால் அபிமான தளங்களை பார்க்கலாம்.

சங்கிலி இணைப்பு போன்ற ஐகானை கிளிக் செய்தால் குறிப்பிட்ட இணையதளத்தை அப்படியே ந‌ண்பர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.இணைய முடிவுகள் தோன்றும் அமைப்பை கூட மாற்றியமைப்பதற்கான வசதி இருக்கிற‌து.

மற்ற தேடியந்திரம் போல இது முடிவுகளை இணையதளம்,செய்தி,புகைப்படம்,என வகைப்படுத்தி காண்பிப்பதில்லை.எல்லா வகையான் முடிவுகளூமே ஒன்றாகவே தொகுத்து அளிக்கப்படுகின்ற‌ன.

ஆனால் குறிப்பிட்ட வகை முடிவு தான் தேவை என்றால் அதற்கேற்ப முடிவுளை சுருக்கி கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.அதே போல முடிவுகளை பெரிதாக்கியும் பார்த்துக்கொள்ளலாம்.

தளத்தின் மேல் பகுதியில் பிரபலமான தேடல் பதங்களும் இடம்பெறுகின்றன.அவற்றை கிளிக் செய்தும் தேடலாம்.

ஸ்வீடனை சேர்ந்த பெலிக்ஸ் மற்றும் பெர்ஸ்ன் ஆகியோர் இந்த தேடியந்திரத்தை உருவாக்கியுள்ளனர்.

வால் போல நீளும் நீல நிற முடிவுகளின் பட்டியலில் இருந்து இணைய தேடலை விடுவித்து மேலும் சிற‌ப்பான அனுபவமாக தேட‌லை மாற்றுவதே இந்த தேடியந்திரத்தின் நோக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.தளங்கள்,வீடியோ,செய்தி,வலைப்பதிவுகள் என தனிதனியே வைகைப்படுத்தப்படாமல் ஒன்றாக முடிவுகள் முன் வைக்கப்படுவதால் ஒட்டுமொத்த நோக்கில் சரியான புரிதல் கிடைப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

——

முடிவுகளை பட்டியலிடும் விதத்தில் மாறுபட்ட காட்சிரீதியிலான தேடியந்திரங்கள் பற்றிய ‘வித்தியாசமான தேடிய‌ந்திரம்;3டி தேடல்’ என்னும் தலைப்பிலான முந்தைய பதிவினை பார்க்கவும்

www.spezify.com/

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

கால்பந்து பிரியர்களுக்கான இணையதளம்

கால்பந்து ஜூரம் (உலககோப்பை கால்பந்து போட்டிகள்)பற்றிக்கொள்ள இன்னும் காலம் இருக்கிற‌து.ஆனால் உலககோப்பையின் போது மட்டும் கால்பந்து பக்கம் வராமல் எப்போதுமே எங்கள் விளையாட்டு உதையாட்டம் தான் என்று நினைக்கும் கால்ந்து பிரியர்களுக்கான சுவாரஸ்யமான இணையதளம் ஒன்று இருக்கிறது.

கால்பந்து பற்றி செய்திகளை தெரிந்து கொள்ள பல தளங்கள் இருக்க‌வே செய்கின்றன.ஃபூட்டிமிக்ஸ் என்னும் இந்த இணையதளத்தில் சிறப்பம்சம் என்னவென்றால் இது ரசிகர்களாளேயே உருவாக்கப்பட்டது என்பது தான்.

ஆம் இந்த தள‌த்தில் செய்திகளுக்கான இணைப்பை வழங்குவது ரசிகர்கள் தான். செய்திக‌ளை இணைய‌வாசிக‌ளே ச‌ம‌ர்பிக்க‌ உத‌வும் டிக் பாணியில் கால்ப‌ந்து ர‌சிக‌ர்க‌ளுக்காக‌ இந்த‌ த‌ள‌ம் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ குறிப்பிட‌ப்பாடுள்ள‌து.(த‌மிழில் உள்ள‌ த‌மிழிழ் போல‌)

கால்ப‌ந்து தொட‌ர்பான‌ செய்திக‌ளை தெரிந்து கொள்ள‌ முடிவ‌தோடு இணைய‌வாசிக‌ள் விரும்பினால் த‌ங்க‌ளூக்கு விருப்ப‌மான‌ செய்திக‌ளை ப‌கிர்ந்து கொள்ள‌லாம். வாக்குக‌ளின் அடிப்படையில் அந்த‌ செய்திக‌ள் முன்னுக்கு வ‌ரும். கால்ப்ந‌து ரசிகர்க‌ள் கேள்விக‌ள் கேட்டு தங்க‌ள் ச‌ந்தேக‌ங்க‌ளை தீர்த்துக்கொள்ள‌வும் வ‌ழி உண்டு.

கால்ப‌ந்து ர‌சிக‌ர்க‌ளூக்கு ச‌ரியான‌ தீனி என்றே சொல்ல‌ வேண்டும்.

http://www.footymix.com/

ஒரு லட்சிய கூரியர் நிறுவனத்தின் இணையதளம்

மிரக்கில் கூரியர் நிறுவனத்தை ப‌ற்றி அறியும் போது விபூதி பூஷன் பாந்த்யோபாத்யா எழுதிய லட்சிய இந்து ஓட்டல் என்னும் நாவல் தலைப்பு தான் நினைவுக்கு வருகிறது.இந்த நாவல் தலைப்பு போலவே இந்நிறுவனத்தையும் லட்சிய கூரியர் நிறுவனம் என்று அழைக்கலாம்.

அப்படி இந்நிறுவனத்தில் என்ன சிறப்பு என்று கேட்கலாம். இங்கு பணியாற்றுபவர்கள் அனைவருமே காது கேளாதோர் என்பது தான் இதன் தனிச்சிறப்பு.

குறைபாடு உள்ளவர்களை அலட்சியப்படுத்துவதையும் அவமானப்படுத்துவதையும் வழக்கமாக கொண்ட ஒரு சமூகத்தில் காது கேளாதோருக்காகவே துவங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் லட்சிய நோக்கு பாராட்டத்தக்கது தான்.

ஆனால் இந்நிறுவனத்தின் பின்னே பரிதாப எண்ணம் கிடையாது.மற்ற எந்த வர்த்தக நிறுவனத்தையும் போலவே இதுவும் லாப நோக்கோடு நடத்தப்படுவது தான்.லாபம் ஈட்ட முற்படும் அதே நேரத்தில் சமூக குறிக்கோளோடும் செயல்பட வேண்டும் என்பதை இந்நிறுவனம் தாரக் மந்திரமாக கொன்டிருக்கிற‌து.

காது கேளாதோரால் எதையும் செய்ய முடியும் என்று உணர்த்துவதோடு அவர்களுக்கான வேலை வாய்ப்பையும் இந்நிறுவனம் ஏற்படுத்தி தந்துள்ள‌து.

உலகிலேயே இந்தியாவில் தான் காது கேளாதோர் அதிகம் உள்ளனர் என்னும் புள்ளி விவரத்தையும் காது கேளாதோர் பெரும்பாலும் மெழுகு வர்த்தி தாயாரிப்பு போன்ற துறைகலிலேயே வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்படுகின்ற‌னர் என்னும் செய்தியையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது இது எத்தகைய முன்னோடி முயற்சி என்பதை புரிந்து கொள்ளலாம்.

காஷ்மீரை சேர்ந்த துருவ் லாக்ரா என்னும் வாலிபர் தான மிரக்கில் கூரியர் நிறுவனத்தை துவக்கி நடத்தி வருகிறார்.மும்பையில் வசிக்கும் இவர் சர்வதேச நிதி நிறுவனத்தில் பார்த்துக்கொண்டிருந்த பெரிய வேலையில் இருந்தவர். பின்னர் அந்த வேலை விட்டு தாஸ்ரா என்னும் அமைப்பில் பணியாற்றச்சென்று விட்டார்.

அரசு சாரா அமைப்புகள் நிர்வாகவியல் முறைகளின் மூலம் செயல்திற‌னை மேம்படுத்திக்கொள்ள வழி செய்து வரும் அமைப்பாக தாஸ்ரா செயல்படுகிறது. இங்கு இருந்த போது தான் அவருக்கு சமூக நோக்கிலான நிறுவனத்தை துவக்கும் எண்ணம் ஏற்பட்டுள்ள‌து.

காது கேளாதோரை கொண்டே நிறுவனம் ஒன்றை துவக்க விரும்பி எந்த துறை ஏற்றதாக் இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது தான் தற்செயலாக கூரியர் ஊழியர் ஒருவரை பார்த்திருக்கிறார். உடனே கூரியர் சேவை காது கேளாதோருக்கு பொருத்தமாக‌ இருக்கும் என்று தோன்றியது.

இந்த எண்ண‌த்தின் மூலம் பிற‌ந்தது தான் மிரக்கில் கூரியர்ஸ் நிறுவனம்.

காது கேளாதோராக பணிக்கு அமர்த்தி அவர்களுக்கு முறைப்படி பயிற்சி அளித்து கூரியர் சேவை வழங்கி வருகிறார்.ஊழியர்கள் யாரிடமும் பரிதாபத்தை எதிரபார்ப்பதில்லை. சேவையின் தரத்தில் சமரசமே இல்லாமல் செயல்பட்டு வருகின்ரனர்.

ஊழியர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று கூரியர் தபால்களை சேர்க்க வசதியாக‌ நகரின் வரைபடம் மற்றும் இதர பணிக்குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.அதோடு எஸ் எம் எச் வசதி தகவல் தொடர்பிறகு பெருமளவு கை கொடுக்கிற‌து.

காது கேளாதோருக்கு என்று உள்ள சைகை மொழி அடங்கிய குறிப்புகளை கையோடு எடுத்துச்செல்கின்ற‌னர்.

இந்நிறுவனத்தின் இணையதளத்தில் எங்கள் நிறுவனம் ஒரு தர்ம ஸ்தாபனம் அல்ல மாறாக் வர்த்தக செயல்பாட்டில் சமூக சிந்தனையை உள்ளடக்கிய சமூக வர்த்தகம் என பெருமித்ததோடு குறிப்பிடப்பட்டுள்ளது.வர்த்தக் செயல் திறனோடு சமூக நோக்கை கலந்து செயல்படுகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காது கேளாதோர் தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் காது கேளாதோர் பற்றிய முக்கிய இணையதளங்களூக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

கொடை வள்ளல்களை விட சமுக நோக்கோடு வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களே உலகில் மாற்ற‌த்தை கொண்டு வர உள்ளவர்களாக க‌ருதப்ப‌டுகின்ற‌னர்.

சமூக தொழில் முனைவோர் நெறு குறிப்படப்படும் இத்தகைய முன்னோடி மனிதர்கள் பற்றி இணையத்தின் மூலம் அறிய நேரும் போது அவர்களைப்பற்றியும் தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணியுள்ளேன் .

http://www.miraklecouriers.com/index.htm